திண்டுக்கல் மாவட்டம் மதிமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை தாங்கினார். அதில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சுதர்சன், துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. மத்திய அரசு மக்களின் மனநிலையை உணராமல் தொடர்ந்து எரிப்பொருள் விலையை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக உணவு, மருந்து, கட்டுமானப்பொருள், ஆடைகள் என்று அனைத்து பொருட்களும் விலையேற்றம் அடையும். கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில், மத்திய அரசின் இந்த விலையேற்ற அறிவிப்பு அவர்களின் நலனை எண்ணிப்பார்க்காமல் இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பை குறைக்கவில்லையெனில் மதிமுக சார்பாக மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. பாஜகவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அனைவரின் மனதிலும் தோன்றி உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பல கட்சி தலைவர்கள் பங்கேற்றது இதற்கான அடித்தளம் ஆகும். இலங்கை நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருமில்லியன் அளவுக்கு நிதி வழங்கி இருக்கிறது. இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் சென்ற 40 நாட்களாக சந்தித்து வரும் பிரச்சினைகள், கச்சத்தீவு பிரச்சினை, ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது போன்ற பிரச்சினைகளை நிதி வழங்கும்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும். இது மத்திய அரசின் முக்கியமான கடமையாகும் என்று அவர் பேசினார்.