ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 18/7/2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த கோவை துடியலூர் சேர்ந்த ரகுராமன்(25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார்(23) போன்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகுராமன் சரண்குமார் போன்றோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி இருவருக்கும் தலா பத்து வருடம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் மேல்முறையீடு முடித்த பின் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை அரசுடமையாக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.