போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வாலிபர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சாலையோரம் 4 கார்கள் மற்றும் 1 டெம்போ ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 5 வாகனங்களையும் மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்போது ஒட்டக பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், சந்துரு மற்றும் ஸ்டீபன் ஆகியோர் வாகனங்களை அடித்து நொறுக்கியது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் கஞ்சா போதையில் ரகளை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்ததில் ஜெகதீஷ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக இருக்கும் நபர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.