முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வெங்கந்தூர் காலனியில் உள்ள சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் அசோக் (25). அதே பகுதியில் வசித்த ஞானவேல்(35) என்பவர் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் அசோக் கஞ்சா விற்று வருவதாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து முன்விரோதத்தில் கடந்த 6ஆம் தேதி ஞானவேலுவை அசோக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் அசோக் தலைமறைவாகியுள்ளார்.
இதனை அடுத்து அசோக்கை கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில், தனிப்படை காவல்துறையினர் அசோக்கை தேடி வந்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாம்பரத்தில் தலைமறைவாக அசோக் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அசோக்கை கைது செய்துள்ளனர். அப்போது அசோக் அளித்த வாக்குமூலத்தில் தனது கஞ்சா வியாபாரம் குறித்து காவல் நிலையத்தில் ஞானவேல் புகார் அளித்ததால் முன்விரோதம் ஏற்பட்டு கொலை செய்துவிட்டேன் என்று கூறினார். இந்த கொலை நடந்த எட்டு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா பாராட்டியுள்ளார்.