உத்தரபிரதேச மாநிலம் மதுரா சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 24ம் தேதி 7 மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை பெற்றோருடன் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்குவந்த நபர் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கடத்திய கும்பல் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் பூனம் மற்றும் விம்லேஷ் டாக்டர் தம்பதியிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவ தம்பதியிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை அப்பகுதியை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ரூ.1.80 லட்சத்திற்கு வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது. பரோசாபாத் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பாஜக பெண் நிர்வாகி வினிதா அந்த குழந்தையை வாங்கியுள்ளார். பின்னர், வினிதா மற்றும் அவரது கணவர் கிருஷ்ண முராரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் தம்பதியிடமிருந்து குழந்தையை வாங்கியதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
பாஜக நிர்வாகி வனிதா – கிருஷ்ண முராரி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என கடத்தல் குழந்தையை வாங்கியுள்ளனர். இதையடுத்து, வினிதாவிடமிருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி வினிதா அவரது கணவர் கிருஷ்ண முராரி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும்,கடத்தல் குழந்தையை வாங்கிய வழக்கில் கைதான பாஜக நிர்வாகி வினிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வனிதா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பெரோசாபாத் மஹானகர் சிட்டி பாஜக தலைவர் தெரிவித்தார்