சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் கார் டிரைவரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் பொன்மனை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து வினோத் அந்த மாணவியை சைகை காட்டி வரவழைத்து பேசியுள்ளார். அதன்பிறகு கடந்த 2-ஆம் தேதி வினோத் மீண்டும் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியை பொன்மனை ஜங்ஷனுக்கு வருமாறு கடந்த 6-ஆம் தேதி வினோத் அழைத்துள்ளார். இதனால் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மாணவி பொன்மணி ஜங்ஷனுக்கு சென்றுள்ளார்.
அங்கு தயாராக இருந்த வினோத் மாணவியை தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமண வயது வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறிவிட்டு வினோத் மாணவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.