தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அப்போது இருந்த அதிமுக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2018 தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு ஒவ்வொருவருக்கும் 1.38 லட்சம் வீதம் மொத்தமாக 25 லட்சம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கும் அரசு பணி வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.