சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகம் முழுவதுமாக கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தமாக 62% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிக அளவில் மத்திய அரசு தடுப்பூசி வழங்கினால் கூடுதலாக தடுப்பூசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அப்போது எளிதாக தடுப்பூசி கிடைத்தும் அதை போடுவதற்கு அப்போதைய அரசு தவறிவிட்டது. கோவாக்சின் தடுப்பூசி குறைவாகவே வருகிறது. தட்டுப்பாட்டின் காரணமாக தான் முதல் தவணை கோவாக்சின் போடப்படுவதில்லை. மூன்றாம் அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் பணி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மூன்று பேர் மீது நிச்சயம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.