கடந்த 5 வருடங்களில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது தகவல் தெரிவித்துள்ளது.
சட்டங்கள் இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், வன்முறைகள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், உரிமைகளைப் பெற போராடுவதற்கும் செய்யப்படும் அதிகாரபூர்வமான அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது சென்ற 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 வருடங்களில் 50,857 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் அதிகபட்சம் மத்தியப்பிரதேசத்தில் 9,572 புகார்கள் வந்துள்ளதாகவும், அடுத்ததாக உத்தரப்பிரதேசத்திலிருந்து 5,340 புகார்களும் வந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 3 இடங்களில் ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் முறையே 4,276, 3,205 மற்றும் 4,685 என்ற அளவில் இருக்கிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.