தன்னை அப்பா என்று கூப்பிட மறுத்த குழந்தையை சிகரெட் நெருப்பால் சுட்ட காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பலோத் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவினாஷ் என்ற காவலரிடம் இந்தப் பெண் கடனாக கொஞ்சம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக காவலரிடம் திருப்பி கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த காவலர் திடீரென பெண்ணின் வீட்டில் தங்கியதோடு அவருக்கு பாலியல் தொந்தரவுகளும் கொடுத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று காவலர் அப்பெண்ணின் குழந்தையிடம் தன்னை அப்பா என்று அழைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த குழந்தை மறுத்ததால் தன் கையில் இருந்த சிகரெட் நெருப்பால் குழந்தையை சுட்டுள்ளார். அதன் பிறகு அப்பெண்ணையும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவினாஷ் ராயை கைது செய்துள்ளனர்.