Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடனால் வீட்டை விற்ற மகன்…. வாசலில் விஷம் குடித்து மயங்கிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மோகன்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மோகன் ராஜ் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மோகன்ராஜ் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் புது வீடு கட்டுவதற்கும் மோகன்ராஜ் சிலரிடமிருந்து கடன் வாங்கி உள்ளார். இதனால் கடனை செலுத்த முடியாமல் அந்த வீட்டையும் மோகன்ராஜ் விற்பனை செய்து விட்டார்.

தற்போது பரமத்திவேலூரில் இருக்கும் மாமியார் வீட்டில் மோகன்ராஜ் தனது மனைவியுடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அய்யம்பாளையம் வந்து தனது பெற்றோரை பார்த்துவிட்டு மோகன்ராஜ் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உறவினர்கள் மோகன்ராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீ விற்பனை செய்த புதிய வீட்டின் வாசலில் உனது பெற்றோர் மயங்கி கிடக்கின்றனர் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் ராஜ் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது விஷம் குடித்து ரங்கசாமி இறந்து கிடந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிய பாப்பாத்தி தனது மகனிடம் நீ வாங்கிய அதிக கடனை கட்ட முடியாமல் சிரமப்படுவதை எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டோம் என கூறியுள்ளார். உடனடியாக மோகன்ராஜ் தனது தாயை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |