கடன் பிரச்சனை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பகுதியில் சின்னத்துரை, பாஸ்கரன், சுரேஷ், ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆவார், இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து விவசாயம் செய்வதற்காக டிராக்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இவர்களிடம் போதிய அளவு பணம் இல்லாததால் செஞ்சி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்கள். இந்த நிதி நிறுவனத்திடமிருந்து 6,30,000 ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளனர். இந்த பணத்தை வைத்து இவர்கள் 2 டிராக்டர்கள் வாங்கியுள்ளனர். அதன்பிறகு கடன் தொகையை சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து திருப்பி செலுத்தியுள்ளனர். இவர்கள் ரூபாய் 2 லட்சம் மட்டும் நிதி நிறுவனத்திற்கு திரும்ப செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில் விவசாயம் சரியான முறையில் நடக்காததால் அவர்களால் பணத்தை திரும்ப அடைக்க முடியவில்லை. இதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை திரும்ப தரும்படி சின்னத்துரை, சுரேஷ், பாஸ்கரன் ஆகிய மூன்று பேரிடமும் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் போதிய வருமானம் இல்லாததால் எங்களால் பணத்தை உரிய நேரத்தில் திரும்ப செலுத்த முடியவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் நாங்கள் பணத்தை திரும்ப செலுத்துகிறோம் என கூறியுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களை ஆபாசமாக திட்டி 1 டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னதுரை வயல்வெளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சின்னதுரையின் உறவினர்கள் அவருடைய உடலை செஞ்சி சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கோவர்த்தனன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு சின்னதுரையின் மரணத்திற்கு காரணமான நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் சின்னத்திரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.