லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகே கோவிலான்விளை பகுதியில் சுரேஷ் ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 லட்ச ரூபாயும், வேறு சிலரிடமும் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை சுரேஷால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெயை தன் மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் சுரேஷ் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சுரேஷ் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்டைக்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.