திண்டுக்கல் மாவட்டம் அருகே கடன் வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே காக்காயன் குளத்துப்பட்டி பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கொரோனா சூழலால் வருமானம் குறைந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மாத தவணை செலுத்த தவறியதால் கடன் தொகை வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்துக் கொண்டு, பணம் வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
அந்த கிராமமே வேடிக்கை பார்க்க அந்த பெண் அவமானத்தில் கூனிக்குறுகி வீட்டிற்கு வெளியே நின்றபடி தவித்தார். அப்பகுதியில் இருந்த சமூக ஆர்வலர்கள் ஊழியரின் செயலை படமெடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நிதி நிறுவன ஊழியரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.