அதிமுக அரசு கடைசி நேரக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது மக்களுக்கான ஆட்சி அல்ல, டெண்டர்களுக்கான ஆட்சி எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வட்டம் புதூர் பகுதியில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், விருதுநகர் மாவட்ட அமைச்சர் பெயர் சொல்வது தமக்கு இழுக்கு எனவும், பலூன், பபூன் அமைச்சர் வரும் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் எனவும் விமர்சித்தார்.
அதிமுக அரசு கடைசி நேரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று மாதங்களில் இரண்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய்க்கான டெண்டர் விட்டு இருப்பதாக குறிப்பிட்டார். அரசின் பணத்தை சுரண்டுவதற்கு டெண்டர் கொள்ளை அடிப்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், இது மக்களுக்கான ஆட்சி அல்ல, டெண்டர்களுக்கான ஆட்சி எனவும் விமர்சித்தார்.
மேலும் பேசிய ஸ்டாலின், ஆட்சி முடியுறத்துக்கு இன்னும் மூன்று மாசம் மட்டுமே இருக்கிற காரணத்தினால் மக்களுக்கு ஏதாவது நன்மை செஞ்சிட்டு போவோம் என்று நினைக்காமல், கடைசி நேரத்துல கிடைச்சத சுருட்டிக்கிட்டு ஓடிடுவோம்னு அலையிறது பழனிச்சாமி கும்பல். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில நடந்துகிட்டு இருக்கக்கூடிய ஒரே வேலை டெண்டர் கொள்ளை தான்.
பொதுமக்கள் கோரிக்கை வச்ச போதும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட போதும், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவிக்க தயங்குன முதலமைச்சர்… இப்போது கமிஷனுக்கான புதிய திட்டங்களை அறிவிச்சிட்டே இருக்குறாரு. தமிழகம் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றது. கடன் வாங்கி கொள்ளை அடிக்கிறவுங்க இவுங்க என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.