தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனை புதூர் முல்லை நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகமணி என்ற மனைவி உள்ளார். இருவரும் சேர்ந்து அறக்கட்டளையின் பெயரில் மகளிர் சேவை மையம் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் மகளிர் குழுவினருக்கு கடன் வாங்கி கொடுக்கின்றனர். இந்நிலையில் பிரியா என்பவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மீண்டும் கடன் கேட்டுள்ளார். அப்போது லோகமணி கடன் வாங்கி தர மறுத்ததால் பிரியாவும் அவருடன் வந்த சிலரும் இணைந்து லோகமணியிடம் தகராறு செய்தனர்.
மேலும் பிரியாவுடன் வந்தவர்கள் லோகமணி, அவரது தம்பி அரவிந்தன், தோழி பிரியதர்ஷினி ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனால் மூன்று பேரும் காயம் அடைந்தனர். மேலும் லோகமணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் அவர்கள் பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து லோகமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பிரியா உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.