அரியலூர் மாவட்டத்தில் 18 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியிலிருக்கும் வடக்கு புதுக்குடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவராக பணிபுரிந்தார். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள மேலூர் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு முருகன் கடந்த 2010 ஆம் ஆண்டு 18 லட்சத்தை கடனாக கொடுத்து, அதற்கான பத்திரமும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு கடனைத் திருப்பித் தருமாறு முருகன், சீனிவாசனிடம் கேட்டுள்ளார். அப்போது சீனிவாசன் பத்திரத்தை திருப்பி கொடுங்கள் கடனை கொடுக்கிறேன் என்றுள்ளார். இதை நம்பிய முருகன் கடன் கொடுத்ததாக எழுதி வாங்கிய பத்திரத்தை திரும்ப கொடுத்துள்ளார். இதனையடுத்து சீனிவாசன் 18 லட்சம் காசோலையாக எழுதி முருகனிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து முருகன் வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் சீனிவாசனின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த முருகன் 2018 ஆம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் நேற்று தீர்ப்பு கூறியுள்ளார். அதில் சீனிவாசனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தும், முருகனிடம் வாங்கிய பணத்தை இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.