காரைக்கால் மேடு பகுதியில் பிளஸ்-2 மாணவியின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் மேடு மீனவர் கிராமங்களில் இருக்கின்ற கடற்கரையில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த மீனவர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் பிளஸ்டூ மாணவி நிவேதா என்பது தெரியவந்துள்ளது.
அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் காணாமல் போகவில்லை, அப்படியே இருந்தன. அதனால் கடற்கரையில் மர்மமான முறையில் மாணவியின் உடல் ஒதுங்கியது எப்படி? என்று போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.