பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன் தன்னம்பிக்கையால் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வடக்கு யார்க்ஷயரில் இருக்கின்ற ஸ்கார்பாரோ பகுதியில் கடற்கரையில் 10 வயது சிறுவன் ரவீராஜ் சைனி தனது தந்தை நாதுராமுடன் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் எதிர்பாராதவிதமாக கடலின் ஆழத்திற்குச் சென்றுள்ளான். அதனைக் கண்ட அவரின் தந்தைக்கு நீச்சல் தெரியாததால் அவனை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் சிறுவன் பயத்தில் தத்தளிப்பதற்கு பதிலாக, மிகவும் அமைதியான முறையில் கடலில் மிதந்திருக்கிறான்.
இதனைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கடலோர மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர மீட்புக்குழுவினர் இரவு 8 மணி அளவில் வின்சென்ட் பியர் அருகே சிறுவனை மீட்டுள்ளனர். தொலைக்காட்சியில் கடலில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்புவது என்ற நிகழ்ச்சியே தன்னை காப்பாற்றியதாக சிறுவன் கூறியுள்ளான். மேலும் நம்பிக்கையைக் கை விடாமல் முயற்சி செய்தால் எவ்வித சிக்கலும் இருந்தும் விடுபடலாம் என்று கூறியிருக்கிறான்.