சரக்கு கப்பலில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அதனை ஈடுசெய்ய மொரீஷியஸ் அரசு போராடி வருகிறது.
ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் சென்ற மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக கருதப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் இந்த கப்பல் மோதியது. அதன்பின் கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரம், பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கி விட்டது. இந்த பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் அரசு தீவிரமாக செயல்பட்டது. கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் பெரிதாக பலன் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து மோசமான நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து மொத்த பெட்ரோலும் கடலில் கலந்துவிடும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் கடலில் கசிந்துள்ள பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்ஸ் அரசிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. கசிந்து வரும் பெட்ரோலால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்த நாடு கவலை தெரிவித்துள்ளது. மேலும் மொரீஷியஸ் கடல் உணவு மற்றும் சுற்றுலா தளத்திற்காக பெரிதும் உதவுகிறது. இது உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.