கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து எந்த தகவலும் தெரியாததால், அவருடைய தந்தை கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்து சாலையோரம் கிடப்பதாகவும் விசாரணையில் அவர் வினோத் என்பது தெரியவந்ததாகவும் ஆந்திர காவல்துறையினர்,கடலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வினோத்குமாரின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர்களை ஆந்திர காவல்துறையினருடன் அனுப்பி வைத்து, அது வினோத்குமார் தானா என்று அவர்களால் உறுதி செய்த பிறகு அங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து கட்டாயமாக கடத்தி செல்லப்பட்ட வாலிபர் வெளிமாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் இரு மாநில காவல் நிலைய துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.