இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகமாக உள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழி மார்க்கமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஞாறான்விளை, பெருமாள்புரம், பழவிலை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த பகுதிகளில் காவல்துறையினர் புதிதாக யாரேனும் குடிபெயர்ந்துள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசின் அனுமதி பெற்று வெளிபகுதிகளில் வீடு கட்டி குடியிருக்கும் மக்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதாவது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை 238 ரூபாயாகவும், 1 லிட்டர் டீசல் விலை 176 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து 1 லிட்டர் பாலின் விலை ரூபாய் 263 ஆகவும், 2 கிலோ அரிசியின் விலை 448 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பொருட்கள், ஆடை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.