ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவில் உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய திருடன், சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சனகிரி மலை ஈஸ்வரன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று கோவிலின் முன்பு வைத்திருந்த உண்டியலை திறந்து அதில் இருந்து பணத்தை எடுத்தனர்.அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன் ஒரு கடிதமும் அதற்கு உள்ளே பத்தாயிரம் ரூபாய் பணமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தை பிரித்து பார்த்த போது,மன்னித்து விடுங்கள், நான் தெரிந்தே திருடினேன். அப்போது முதல் எனக்கு நிம்மதி இல்லை. வீட்டில் நிறைய பிரச்சனை. மனம் திருந்தி திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் வைத்துள்ளேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாரா என தெரியாது என எழுதப்பட்டிருந்தது.