போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்.பி சாலையில் சத்யா டைம்ஸ் என்ற கடிகார கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து சென்ற ஒருவர் 22 ஆயிரம் ரூபாய்க்கு 2 கை கடிகாரங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும், அருகில் இருக்கும் வீட்டிற்கு ஊழியரை தன்னுடன் அனுப்பி வைத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் அவருடன் சென்றுள்ளார். அப்போது கடை ஊழியரை ஏமாற்றிவிட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய நபர் சிவா என்பது தெரியவந்துள்ளது. இவர் ஜோஸ்வா என்ற பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார். மேலும் சிவா மீது வடபழனி, சங்கர் நகர் ஆகிய காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.