தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியல் அடைத்து வைத்துவிட்டு பெருமாள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டதால் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பட்டியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெருமாள் உடனடியாக நாய்களை அங்கிருந்து விரட்டினார்.
இந்த நாய்கள் கடித்ததால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். இதனையடுத்து ஆடுகள் புதைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 9 ஆடுகள் ஒரு கன்று குட்டி போன்றவைகள் நாய்கள் கடித்து இறந்தது. மேலும் 2 சிறுவர்களையும் நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் காரணமாக தெரு நாய்களை அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.