மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடக்கப்பட்டு இருந்த 7 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சபரிமலைநாதன் ஆகியோர் இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டுள்ளனர். அப்போது மர்ம விலங்கு கடித்ததால் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.