கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நிதியுதவி வழங்கிய உதவிய இந்தியாவிற்கு மாலத்தீவு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது உயிரிழப்புகள் ஒருபக்கம் துயரத்தை கொடுத்தாலும் மறுபுறம் பொருளாதார வீழ்ச்சி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு ஜிடிபி மைனஸில் போய்க்கொண்டிருக்கிறது. இதே நிலை பல நாடுகளில் நிலவி வருகிறது.
அவ்வகையில் மாலத்தீவில் தொற்றினால் 10,297 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 9,508 பேர் குணமடைந்து 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலி தங்கள் நாட்டிற்கு நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாலத்தீவுக்கு உடனடியாக இந்தியா 250 மில்லியன் டாலரை நிதி உதவியாக வழங்கியது.
இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் 75 ஆம் ஆண்டு விழாவில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் பேசியபோது 250 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1800 கோடிக்கும் அதிக தொகையை எங்கள் நாட்டிற்கு நிதி உதவியாக கொடுத்த இந்தியாவிற்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்