பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளநிலையில் ஒரே நாளில் 15 லட்சம் கோடியை இழந்துள்ளது மெட்டா நிறுவனம்.
பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது பயன்பாட்டாளர்ளை இழக்கத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 20% வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தில் 4 வது காலாண்டில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பேஸ்புக்கை தினசரி பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 192.9 கோடியாக குறைந்து விட்டது. ஆனால் அதற்கு முந்தைய காலாண்டில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 199 கோடியாக இருந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் தான் முதன் முறையாக தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு சுமார் 75 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது . இந்த கணிப்பு வெளியான பின்னர் இதன் சந்தை மதிப்பு 20 % அதாவது 200 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது .
மேலும் ஒரே நாளில் மெட்டாவின் சந்தை இந்திய மதிப்பீட்டில் சுமார் 15 லட்சம் கோடி அளவுக்கு சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த சரிவிற்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றி அமைத்து உள்ள பாதுகாப்பு அம்சங்களும் டிக் டாக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதே காரணமாக சொல்லப்படுகிறது. கடும் போட்டி எதிரொலியாக வரும் காலகட்டத்தில் ஃபேஸ்புக்கில் தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் சரியவாய்ப்புள்ளது.