பீகார் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பீகாரின் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தற்போது வரை பீகாரில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மதுபனி, சிவான் ஆகிய பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், இந்த பகுதிகளை ஒட்டியுள்ள 71 கிராமங்கள் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துு வருகின்றன. மாநிலம் முழுவதும் மொத்தம் 39.63 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுு 11 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மேற்கொண்டுள்ள மீட்பு பணி மூலம் 3.16 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த 21 தனிப்படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.