மெக்கானிக் கடைக்காரரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வன அலுவலக சாலையில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் பஸ், லாரி ஆகியவை பழுது நீக்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கருநாக்கமுத்தம் பெட்டியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் பிரபுவும் வீட்டை பூட்டிவிட்டு மெக்கானிக் கடைக்கு சென்றுள்ளார்.
மேலும் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் சரவணனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து கடையில் வேலையை முடித்துவிட்டு பிரபு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை கண்டு பதறிய பிரபு உடனடியாக கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி மற்றும் காவல்துறையினர் பிரபுவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளிகள் விட்டுச் சென்ற தடயங்கள் சேகரித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.