பிஜேபிவை தமிழகத்திலே உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு நிச்சயமாக கடைசி இரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என கருணாஸ் பரபரப்பாக பேசியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப் பட்டவன். அவருடைய வாயிலிருந்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முக்குலத்தோர் புலி படையினுடைய கருணாஸ் அவர்களை அறிவித்த அந்த ஒலி இன்றும் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே தொடர்ந்து என் சமூகம் சார்ந்த… என் சமுதாயம் சார்ந்த மக்களுக்காக…. இந்த தமிழ் சமூகம் சார்ந்த நலனுக்காக… தமிழர்களுடைய விரோதப் போக்குகளை கையில் எடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய பிஜேபி போன்ற தீய சக்திகளை இந்த தமிழகத்திலே உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு நிச்சயமாக கடைசி இரத்தம் இருக்கும் வரை முக்குலத்தோர் புலி படை போராடிக் கொண்டே இருக்கும் என கருணாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கருணாஸ், கூட்டணிக்கு என்னை சில பேர் அழைக்கிறார்கள், நான் சில பேரோடு பேசிக் கொண்டிருக்கிறேன், மாற்றுக் கருத்து இல்லை. என்னை பொறுத்தவரை சுயநலமாக வாழ்வதும், சுயநலமாக சிந்திப்பதும், பொது நலத்தை துறந்து செய்வதும் தான் அரசியல் என்று சொன்னால்…. அந்த அரசியல் என்னை போன்றவர்களுக்கு தேவையில்லை என்று தான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து என்னுடைய சமுதாயம் இப்படி வஞ்சிக்கப்படுகிற பொழுது… 21 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இன்றைக்கு 10.5சதவீத இடஒதுக்கீடு வழங்கப் பட்டதற்கு பிறகாக… ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு கிராமங்களிலும் இன்றைக்கு கருப்புக்கொடி ஏந்தி வீதியிலே வந்து என்னுடைய இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால்…. இதுதான் என்னுடைய இளைஞர்கள் முதல் படி வெற்றியை கண்டிருக்கிறார்கள், இது தொடரும். எங்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும்வரை போராடுவோம். சட்டசபை இறுதி நாளில் அவை முடியும் 2மணி வரை நான் அங்கு தான் இருந்தேன். திடீர்னு அவசர அவசரமா ஒரு ஒரு மணி நேரத்துல தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி வெளியிடுறதுக்கு முன்னாடி வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை உடனே அறிவிக்கிறாங்க. இது எல்லா சமுதாய மக்களுக்கும் தெரிகிறது என கருணாஸ் பேசினார்.