தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. அதுமட்டுமன்றி மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் கடைசி பேருந்துகள் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து – காஞ்சிபுரம் இரவு 8.40, வேலூர் – மாலை 6.55, பெங்களூரு – பிற்பகல் 2.10, ஆரணி – இரவு 7.20, கோயம்பேட்டில் இருந்து- திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் தர்மபுரி பிற்பகல் 2 மணி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருதாச்சலம் மற்றும் நெய்வேலி மாலை 4 மணி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி மாலை 5 மணி, காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி மாலை ஆறு மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும்.