அரக்கோணம் அருகே கடையின் ஷட்டர் கதவை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள எல்லை அம்மன் வட்டம் என்ற கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பதினாறு வயதுடைய ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களாக அரக்கோணம் ஜோதி நகரில் இருக்கின்ற பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கடையைத் திறப்பதற்காக ஸ்ரீதர் சென்றபோது,அவர் பக்கத்து கடை இரும்பு சட்டர் மீது கை வைத்து உள்ளார். அச்சமயத்தில் ஷட்டர் மீது உரசிச் சென்ற வயர் மூலம் மின் கசிவு ஏற்பட்டு ஸ்ரீதரை மின்சாரம் தாக்கி உள்ளது.
அதில் பலத்த காயமடைந்த அந்த சிறுவனை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.இதுகுறித்து அரக்கோணம் காவல் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்.