ஜெர்மனியில் அதிவேகமாக வந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததால் பிறந்து ஒன்பது வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர்.
ஜெர்மனியின் மேற்பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்கு சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி, வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் திடீரென்று பாய்ந்து. இதில் பல கார்கள் தூக்கி வீசப்பட்டன. அங்கு பெரும் பதற்றம் உருவானது. மக்கள் இதனை கண்டு அலறி அடித்து அங்கும் இங்குமாக ஓடினர்.
அந்த கார் நிற்காமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழியில் நின்றவர்களை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இந்த கோர சம்பவத்தில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை மற்றும் 75 வயது மூதாட்டி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது வாகனங்களில் அந்த காரை விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த கார் டிரைவரை கைது செய்தனர். அவர் மது போதையில் கார் ஓட்டி வந்து இந்த சம்பவத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.