சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒவ்வொரு முறையும் அரசியலில் எங்களைப் போன்ற விசுவாசிகளை வீழ்த்தி, அதற்கு அடுத்தபடியாக இருக்கின்ற பொறுப்பாளர்களை வீழ்த்தி, தனக்கு வாழ்வளித்த சின்னம்மா அவர்களை வீழ்த்தி, தான் முதலமைச்சராக தொடர வாய்ப்பு அளித்த ஓபிஎஸ் அவர்களையும் வீழ்த்தி, இன்று வஞ்சகத்தால் துரோகத்தால் இப்படிப்பட்ட பதவியைப் பெற்று, இப்போது அதே வஞ்சக சூழ்ச்சியால் கட்சியை கபளிக்கரம் செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.
நான் கிட்டத்தட்ட 1999 இல் இருந்து 23 வருடமாக அம்மாவின் உடைய விசுவாசியாக, அம்மாவுக்காக கழகத்திலே… கண்ணும், கருத்துமாக உழைத்துக் கொண்டிருக்கின்ற உண்மை தொண்டன். எடப்பாடி தொகுதியிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற ஒருவன்… அம்மாவால் 2008 இல் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த ஒருவன், கழகத்தினுடைய பல்வேறு பொறுப்புகளில் இருந்தவன்..
இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சட்டசபை தேர்தலிலே தொகுதி பொறுப்பாளராக வேலை செய்தவன். ஆனால் எங்களை எல்லாம் பழி வாங்குகின்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு, எங்களையெல்லாம் புறக்கணித்து, எங்களை எல்லாம் வீழ்த்தி தான் இந்த சூழ்நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இதை நீங்கள் எடப்பாடி தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் காணலாம் என தெரிவித்தார்.