தமிழக பட்ஜெட்டுக்கு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆசிரியர் வட்டாரத்தில் பாரட்டை பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் ,ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகளுக்காக ரூ. 506.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள், பென்சில்கள் உள்ளிட்டவற்றை விலையில்லாமல் வழங்குவதற்காக 2020-21 திட்டத்தில், 1,018,39 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக 966.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 158 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 277.88 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி உதவியுடன் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல அறிவிப்புகள் கல்விக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.