கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர்உதேசிங்கு ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 57.58 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 103.21 ரூபாயாக இருக்கிறது. இதனையடுத்து ஒரு செட் டயர் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேப்போன்று வாகன உதிரி பாகங்கள், வாகன சேஸ், என்ஜின் ஆயில் போன்றவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே தமிழக அரசு இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.