கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வாவிபாளையம் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லிபாளையத்தில் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அரசு ஒப்பந்ததாரராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதாக தென்னரசு மீது புகார் இருந்து வருகிறது. அதனடிப்படையில் அவருடைய வீடு மற்றும் கட்டுமான அலுவலகம் போன்ற இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து வாவிபாளையத்தில் உள்ள தென்னரசு வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், நல்லிபாளையத்தில் உள்ள அவரது கட்டுமான நிறுவன அலுவலகத்தில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு அதிகாரி நந்தகோபாலன் தலைமையில் காவல்அதிகாரிகள் சுமார் 9 மணிநேரம் சோதனை செய்துள்ளனர். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்ட பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.