மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் தங்கவேல், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச் சாமி, மகளிர் திட்ட இணை இயக்குனர் வானதி, துணை இயக்குனர் ராமகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், உதவி இயக்குனர் ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் ஒருங்கிணைந்து வாக்கு பதிவு மையங்களுக்கு தேவையான பொருள்களை சரிபார்த்து அனுப்ப வேண்டும். இதனையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், மின்சாரம், குடிநீர், கழிவறை ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கட்டாயமாக சி.சி.டி.வி. கேமரா பொருத்தி இருக்க வேண்டும். மேலும் தேர்தல் முடிந்த பிறகு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பும் வரை கவனமாக செயல்பட வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.