விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று கண்டாஸ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கும், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு இடையேயான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதையடுத்து தற்போது விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச விமானங்களில் பயணிப்போர் எல்லோரும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த கண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அனைத்து பயணிகளுக்கும் தடுப்பூசி போடும் முறை அமல்படுத்தப்படும் என்று கண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சர்வதேச விமான பயணிகளுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றுவதற்காக திட்டமிட்டிருக்கிறோம். இதன்படி விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகள் கட்டாயமாக தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவர். மேலும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு தடுப்பூசி தேவையா? என்பதை மார்க்கெட் நிலவரத்தை அறிந்த பிறகே முடிவு செய்ய முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் இங்கிருந்து வெளிநாடு செல்வோருக்கு தடுப்பூசி போடப்படுவது கட்டாயம் என கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.