இளம்பெண் ஒருவர் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் சொத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு கடைமடை பகுதியை சேர்ந்தவர்கள் குமார்-தொட்டியம் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மகள் லட்சுமி தனியார் கல்லூரி ஒன்றில் எம் காம் படித்து வந்தார். இந்நிலையில் லட்சுமியின் தாய் சமீபத்தில் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆனால் லட்சுமி வேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் கடைமடை பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் போன்றவர்களுடன் சேர்ந்து கட்டாய திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி லட்சுமிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தம்பி மகன் சக்திவேலுக்கு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த நாளிலிருந்து சக்திவேல் லட்சுமியிடம் விருப்பத்திற்கு மீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அதோடு லட்சுமி மற்றும் அவரது தாய் பெயரில் இருக்கும் சொத்து மற்றும் வீட்டை சக்திவேல் தனது பெயரில் மாற்றி எழுதவேண்டும் என்று குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமை செய்துள்ளார். இதனால் லட்சுமி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எனது சுதந்திரமான வாழ்க்கைக்கு ஒரு வழி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். புகாரில் தனக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்த தனது பெற்றோர் மீதும் லட்சுமி குற்றம் சுமத்தியுள்ளார்.