திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தாஜூதீன்(33) என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் கோவை கணபதி பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி இருந்து கட்டிடப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று தாஜூதீன் தனது தந்தை அப்துல்லாவுடன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தாஜூதீனின் உடலில் கம்பியால் தாக்கிய காயங்களும், சூடு வைத்த அடையாளங்களும் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் விசாரித்த போது, மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்து பணம் மற்றும் நகையை பறித்து சென்றதாக தாஜூதீன் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 30-ஆம் தேதி இரவு தாஜூதீனின் விடுதி அறைக்குள் புகுந்த 15 பேர் அவரை கம்பியால் தாக்கியும், சிகரெட் பற்ற வைத்து சூடு வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 5 பவுன் தங்க நகை, 3 லட்சம் ரூபாய் பணம், வைர தோடு ஆகியவற்றை பறித்தனர். மேலும் அப்துல்லாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியனர். பின்னர் 2 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு அப்துல்லா சென்ற போது கோவை சூலூர் பகுதியில் வைத்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 2 லட்ச ரூபாயை பறித்துவிட்டு தாஜூதீனை விட்டு சென்றனர். இதுகுறித்து அப்துல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.