லாரி கட்டுபாட்டை இழந்து எம்.எல்.ஏவின் பழக்கடைக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து டிப்பர் லாரி ஒன்று ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு அரியூர் அருகே உள்ள சோளக்காடுக்கு சென்றுள்ளது. இந்த லாரியை அக்கியம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து ஜல்லிக்கற்களை சோளக்காடு கிராமத்தில் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சேந்தமங்கலத்திற்கு திரும்பியுள்ளார்.
அப்போது சோளக்காடு பேருந்து நிலையம் அருகே சென்ற போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த எம்.எல்.ஏ பொன்னுசாமியின் பழக்கடைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் லாரி டிரைவர் தமிழ்செல்வனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த சமயத்தில் கடைக்குள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.