கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சாயிநாதபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவியுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். இவர் சாலை கிராமம் எஸ்.ஆர் கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பொதுமக்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த சீனிவாசன்(45), கன்னியப்பன்(65), மாற்றுத்திறனாளியான உண்ணாமலை(45) அதிகம் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கலெக்டர் வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறி உடல்களை எடுக்க விடாமல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மூன்று பேரின் உடல்களும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.