கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது இந்த பேருந்து சிலைமான் அருகில் சென்று கொண்டிருந்தபோது பசுமாடு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பசு மாடு மீது மோதி நிற்காமல் சென்று முன்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மணிமாறன், ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
மேலும் வயிற்றிலிருந்து கன்றுகுட்டி வெளியே கிடந்த நிலையில் பசுமாடும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த ராஜ்குமார் என்பவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.