கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர் சமயநல்லூர் பாத்திமா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தேக்கு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.