இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள பச்சாம் பாளையத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் திருவள்ளூர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.