கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை இன்ஜினுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புளோரிடா மாகாணம் டேடோனா கடற்கரை பகுதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி விமானத்தை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தரை இறக்குவதற்கு முயற்சித்தார் ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வராத விமானம் விமான நிலையத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்தக் கோர சம்பவத்தால் அதில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் விபத்திற்கு உள்ளானதற்காண காரணம் தெரியாத நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது