மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு ரூபாய்.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாசுஅளவு மிகவும் மோசமடைந்து வருவதால் தில்லி என்.சி.ஆரில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக் குழு கடந்த சனிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனால் தில்லி முழுதும் மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளிக்கும் ரூபாய்.5000 நிதியுதவி வழங்குமாறு தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் செய்துள்ளார். கொரோனா தொற்று நோய்களின்போது தில்லியில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆம் ஆத்மி அரசு நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது