கணவனை பயமுறுத்துவதாக நினைத்து மனைவி வாயில் விஷம் ஊற்றி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அவினாஷ் (26), ஸ்ரீலஷ்மி (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பினார். இதன் பின் அவரது மனைவி கருவுற்று 1மாதம் ஆன நிலையில் கணவர் துபாய்க்கு செல்வதை விட்டுவிட்டு மனைவியுடன் உதவியாக இருக்க முடிவு செய்தார்.
ஆனால் அவரது மனைவி நீங்கள் துபாய்க்கு செல்லுங்கள் எனக்கு உதவியாக அம்மாவை வைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு அவரது கணவர் எனது கம்பெனியில் லீவை நீட்டித்து தந்து விட்டார்கள். அதனால் இன்னும் மூன்று மாதம் கழித்து தான் நான் துபாய்க்கு போக வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று தங்களுடைய முதல் திருமண நாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இதன் பின் மறுநாள் 9 ஆம் தேதி அன்று காலையில் இருவருக்குமிடையே துபாய் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி விஷத்தை எடுத்து வாயில் விட்டு, அதை விழுங்காமல் கணவரை பயம் காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியுற்ற கணவன், தான் துபாய்க்கு செல்வதாகவும் விஷயத்தை துப்பவும் கூறியிருக்கிறார். அப்போது அவரது மனைவி, தலையில் சத்தியம் செய் என பேச முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக விஷம் வாய்க்குள் சென்றுவிட்டது. உடனே கணவர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்த நிலையில் போலீசில் வாக்குமூலம் கொடுத்து விட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.